பதிவு செய்த நாள்
24
ஜூலை
2022
06:07
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி வடிவுடையாம்பாள் சமேத வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் பிரமோற்ஸவம் துவங்கியது.
இக்கோயிலில் ஆடி மாதம் வயிரவருக்கு 11 நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். நேற்று முன்தினம் வயிரவர் சன்னதி எதிரில் அனுக்ஞை, கணபதி வாஸ்து சாந்தி ஆகிய பூர்வாங்க பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:40 மணிக்கு கொடிபடத்துடன் வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகருடன் திருவீதி வலம் வந்தனர். தொடர்ந்து கொடிமரத்தின் அருகே அங்குசத்தேவர், உற்ஸவ விநாயகர், வயிரவ சுவாமி எழுந்தருளினர். பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து காலை 8:20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிவக்குமார் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் பூஜை நடத்தி அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் யாகசாலை பூஜை, ஹோமம் நிறைவாகி சுவாமிக்கு காப்புக் கட்டி பிரமோற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து இரவில் சிம்ம வாகனத்தில் வயிரவர் திருவீதி வலம் வந்தார். தொடர்ந்து தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணிக்கு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஜூலை 31 ல் தேரோட்டம், ஆக.1 ல் தீர்த்தவாரி, பூப்பல்லக்கு ஆக. 2ல் மகா அபிஷேகம், திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள், வயிரவர் திருவீதி உலாவுடன பிரமோற்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை ஏழக பெருந்திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் தலைவர் டி.எஸ்.திட்டாணி, செயலாளர் ராம.ரவி, பொருளாளர் என்.பழனியப்பன், இணைச் செயலர் எஸ்.எஸ்.டி.சுவாமிநாதன், துணைத்தலைவர் அண்ணாமலை செய்கின்றனர்.