சந்திரபுஷ்கரணிக்கரை கோதண்டராமர் சன்னதியை அடுத்துள்ளது இந்த ஆண்டாள் சன்னதி, இச்சன்னதியில் பிரதானமாக ஸ்ரீதேவி,பூதேவி,நீளாதேவி சமேதராய் ஸ்ரீபரமபதநாதர் சேவை சாதிக்கிறார். சன்னதியின் மேல்புறம் கண்களை நிறைக்கும் அழகுடன் கண்ணாடி அறையில் பூமிதேவி அம்சமான ஆண்டாள் சேவை சாதிக்கிறார். இந்த சன்னதியில் ஒரு வைணவக்கோயிலில் இருக்க வேண்டிய நித்யசூரிகள் முதல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் அனைவரும் ஒரு சேர சேவை சாதிக்கின்றனர். ரங்கநாதர் ஸ்ரீரங்கம் வருவதற்கு முன்பே இங்கு இந்த பரபதநாதர் சன்னதி இருந்ததாகவும், பழமையான இக்கோயிலும், சந்திரபுஷ்கரணியும் அருகருகே இருப்பதைப்பார்த்தபிறகே வான்மார்க்கமாக இலங்கை நோக்கிச் சென்ற விபீஷணன் ரங்கவிமானத்தோடு சந்தியாவந்தனம் செய்ய இவ்விடத்தில் இறங்கியதாகவும், பின்னர் ரங்கநாதர் இங்கேயே தங்கிவிட்டதாகவும் இச்சன்னதி அர்ச்சகர் தெரிவிக்கிறார். தற்போது 20 நாட்கள் நடைபெறும் திருவத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசிவிழா, முதலில் 10 நாள் விழாவாக இந்த சன்னதியில்தான் திருமங்கையாழ்வார் காலத்தில் நடந்தப்பெற்றதாகவும், பின்னர் நாதமுனிகள் காலத்தில் 20 நாள் விழாவாக விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.