பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
05:07
பெரம்பலுார் : -அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலில், ஆடித் திருவாதிரை உற்சவம் துவக்க விழா, கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது.
விழாவை துவக்கி வைத்து, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் மகன் ராசேந்திரன் சோழன் ஆட்சிக் காலத்தில், கப்பல் படை மூலம் கடல் கடந்து போரிட்டு, தென்கிழக்கு ஆசியா முழுதும் சோழப் பேரரசை விரிவுபடுத்தினார்.நிர்வாகச் சீர்திருத்தத்திலும் சிறந்து விளங்கிய ராசேந்திர சோழன், கங்கை வெற்றியைக் கொண்டாடும் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரத்தில், பிரமாண்டமான பெருவுடையார் கோவிலை கட்டினார்.நாட்டிலேயே மிகப் பெரிய ஏரியை உருவாக்கி, சோழகங்கம் எனப் பெயரிட்டார். அதுவே, தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.
கொள்ளிடத்தில் இருந்து கால்வாய் அமைத்து, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடத்தையும் உருவாக்கியுள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில், அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த நீர் மேலாண்மை நம்மை வியக்க வைக்கிறது.ஆடி திருவாதிரை நட்சத்திரத்தன்று, பல்வேறு சிறப்புகளுடைய ராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இந்த விழா, இரண்டு நாட்கள் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரித்த ராசேந்திர சோழனின் வரலாறு குறுந்தகடு வெளியிட்டார்.முன்னதாக, பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில் பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், மாணவ -- மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.