பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
05:07
நாளை ஜூலை 28 ஆடி அமாவாசையை முன்னிட்டு தாணிப்பாறை மலையடிவார தோப்புகளில் பக்தர்கள் குவியத் துவங்கி உள்ளனர். அறநிலையத்துறை சார்பில் மலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் இடைவிடாது அன்னதானம் வழங்கப்படுகிறது. மலையடிவாரத்தில் தனியார் மடங்களின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. வனத்துறை சார்பில் நீர்வரத்து ஓடைகள், அபாயகரமான பகுதிகளில் வனக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறை சார்பில் நவீன கருவிகள், மீட்பு சாதனங்களுடன் நான்கு பேர் கொண்ட குழுவினர், சுமார் 30 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒன்பது தீயணைப்பு வாகனங்கள், மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மருத்துவத்துறை சார்பில் தாணிப்பாறை அடிவாரத்தில் உயிர்காக்கும் மருத்துவ கருவிகளுடன் ஒரு மினி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 டாக்டர்கள் கொண்ட மூன்று குழுவினர், 24 மணி நேரமும் பணியமத்தப்பட்டுள்ளனர். ஒரு நடமாடும் மருத்துவ வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும், மதுரையில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 5 இடங்களில் பார்க்கிங் வசதியும், அரசு பஸ்சிற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன்கோவில் வழியாக வரும் வாகனங்கள் வத்திராயிருப்பு, சேது நாராயணபுரம் விலக்கு வழியாக நான்காவது பார்க்கிங் இடம் வழியாக சென்று, சிவசங்கு மடம் மகாராஜபுரம் ரோடு வழியாக வெளியில் செல்ல வேண்டும். அழகாபுரி வழியாக வரும் வாகனங்கள் தாணிப்பாறை விலக்கு வழியாக பார்க்கிங் இடங்களுக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வரை அரசு பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை டி.ஐ.ஜி., மதுரை, விருதுநகர் எஸ்.பிக்களும், பிற அரசு துறை தலைமை அதிகாரிகளும் தங்களது துறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்தனர்.