பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
07:07
சென்னை: திருமலையிலிருந்து உற்சவ மூர்த்தி கொண்டுவரப்பட்டு பண்டிதர்களால் திருப்பதியில் நடப்பது போன்று ஆரணியில் ஏ.சி.எஸ்.கல்விக்குழும வளாகத்தில் சனிக்கிழமை (30ம் தேதி) சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமர்சையாக நடக்கிறது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதமும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு, புதுச்சேரி மாநில திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த ஏப்ரல் 16-ந்தேதி சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சீனிவாச திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு, பழங்கள், குடிநீர் உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 2-வது முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆரணியில் உள்ள ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் சார்பில் அங்குள்ள ஏ.சி.எஸ். கல்வி குழும வளாகத்தில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நல்லவேளையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்: இதற்காக திருமலையிலிருந்து நாளை (வௌ்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருமலை திருப்பதியில் இருந்து உற்சவ உற்சவர் மூர்த்தி ஆரணிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 30-ந்தேதி காலை 7 மணிக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, சர்வ தரிசனமும், அன்று மாலை 4.30 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. சுமார் 2 மணி நேரம் திருமலையில் நடப்பது போன்று திருக்கல்யாண உற்சவம் நடக்க இருக்கிறது. பண்டிதர்களும் திருமலையிலிருந்து வர உள்ளனா். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் செயல்-அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தியாகராயநகரில் புதிதாக கட்டப்படும் பத்மாவதி தாயார் கோவில் திட்டமிட்டப்படி பணிகள் நடந்து வருகிறது. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஏ.சி.சண்முகம் கூறியதாவது: ஆரணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் ஆலோசனைக்குழுத் தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி ஏற்பாட்டில் நடக்க இருக்கிறது. இதில் வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (இன்று) மாலை 6 மணிக்கு திருமலையிலிருந்து வரும் உற்சவ மூர்த்திக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்து தந்த திருமலை -திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.