பதிவு செய்த நாள்
31
ஜூலை
2022
07:07
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி தன் உரையில், திருவாரூர் மாவட்டம், திருப்பூவனுார் சதுரங்க வல்லபநாதர் கோவில் குறித்து குறிப்பிட்டார். எனவே, அந்த கோவில் குறித்து தேடும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூவனுாரில் சதுரங்கம் ஆடிய சிவபெருமான் குறித்த தகவல்கள் வருமாறு:ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் என்பவர், பாழடைந்த கோவில்களை புனரமைப்பதற்காக, தன் திருக்கூட்டத்தின் வாயிலாக தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். திருப்பூவனுார் கோவில் சிறப்பு குறித்து, அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருந்தது. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க போகும் தகவல் வெளியானதும், திருப்பூவனுார் சதுரங்க வல்லப நாதர் குறித்த வரலாறு மற்றும் கோவில் பெருமைகளை, உலகுக்கு சொல்ல வேண்டும் என முடிவு எடுத்தார்.செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகள் சிலரை வரவழைத்து, சதுரங்க வல்லப நாதர் முன், சதுரங்க பலகையை வைத்து, சிறப்பு வழிபாடு செய்தார். கோவிலில் ௧௦௦க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சதுரங்க பலகைளை வழங்கி, அவர்களை விளையாட வைத்தார். அது தொடர்பான செய்தி வெளியானது.இந்த தகவல், சிலரால் பிரதமர் மோடி வரை எடுத்து செல்லப்பட்டது.
அதையடுத்தே, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க, தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவில் சிறப்பு பற்றியும் பேசினார்.இதுகுறித்து, திருவடிக்குடில் சுவாமிகள் அளித்த பேட்டி:கடந்த 2004ல் பாதயாத்திரையின் போது, திருப்பூவனுார் வழியாக வந்தேன். அங்குள்ள ஈசன், சதுரங்க வல்லப நாதர் என்றதும், கோவில் வரலாறு குறித்து கேட்டறிந்தேன்; ஆச்சரியமாக இருந்தது. குருக்கள் ஒருவர், கோவில் வரலாற்றை கூறினார். ஆனால், கோவிலுக்கான தல வரலாறு பதிவு எதுவும் இல்லை என்று கூறி விட்டனர்.தியாகராஜ முதலியார் என்பவர் பரம்பரைக்கு சொந்தமான கோவிலாக இருந்து, அறநிலையத் துறை கோவிலாக மாறினாலும், தியாகராஜ முதலியார் குடும்பத்துக்கு தான், திருவிழாக்களின் போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.பிரதமர் மோடி, சதுரங்க வல்லபநாதர் பெருமைகளை கூறியுள்ளார்; அவருக்கு நன்றி. ஆண்டுதோறும் ஜூலை 20ம் தேதி, சதுரங்க விளையாட்டு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இனி வரும் ஆண்டுகளில், அந்த நாளில், திருப்பூவனுாரில் உள்ள சதுரங்க வல்லப நாதர் கோவிலை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்த, தமிழக அரசு முன்வர வேண்டும்.எலிக்கடி, விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவில் குளத்தின் புண்ணிய தீர்த்தத்தில் வேர் கட்டி நீராடுகையில், நலம் பெறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
வரலாறு என்ன?: முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த வசுசேனன் என்ற மன்னனின் குடும்பத்தினர், சிவ பக்தர்களாகத் திகழ்ந்தனர்; மன்னனுக்கு வாரிசு கிடையாது. ஒரு நாள் மன்னன் வசுசேனனும், அவர் மனைவி காந்திமதியும், நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கை கண்டெடுத்தனர். கையில் எடுத்த நொடியில் சங்கு, அழகிய பெண் குழந்தையாக மாறியது. அது இறைவன் திருவிளையாடல் என உணர்ந்து, பெண் குழந்தைக்கு ராஜ ராஜேஸ்வரி என்று பெயரிட்டு வளர்த்தனர்.சகல கலைகளையும் கற்று தேர்ந்த ராஜ ராஜேஸ்வரி, சதுரங்க விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.அவருக்கு திருமண வயது வந்ததும், என் மகள் ராஜேஸ்வரியை யார் சதுரங்க விளையாட்டில் வெல்கிறாரோ, அவரையே மணமுடித்து வைப்பேன் என, மன்னர் அறிவித்தார். ஆனால், யாராலும் ராஜராஜேஸ்வரியை வெல்ல முடியவில்லை. கவலையடைந்த மன்னன், குடும்பத்தோடு தல யாத்திரை புறப்பட்டார். திருப்பூவனுாருக்கு வந்து, அங்கிருந்த புஷ்பவனநாதரை தரிசித்தார்; குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார்.
அந்த சமயத்தில் வந்த ஒரு வயோதிகரிடம், சதுரங்க போட்டியில் ராஜேஸ்வரி தோற்று விட்டார். எனவே, ராஜேஸ்வரியை தனக்கு மணம் முடித்து வைக்க கூறி, மன்னர் வசுசேனனை வயோதிகர் வற்புறுத்தினார்.வசுசேனனுக்கு குழப்பம் ஏற்பட்டது; வழக்கம்போல, சிவபெருமானிடம் சரணடைந்தார். அந்த சமயத்தில், வயோதிகர் மறைந்து, சிவபெருமானே காட்சி அளித்தார். வயோதிகராக சித்தர் ரூபத்தில் வந்த அவர் தான், சதுரங்க வல்லபநாதர்.திருப்பூவனுாரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு சதுரங்க வல்லபநாதர் என பெயர் சூட்டப்பட்டு, ராஜேஸ்வரியின் வளர்ப்பு தாயான சாமுண்டீஸ்வரிக்கும், திருப்பூவனுார் கோவிலில் சன்னிதி அமைக்கப்பட்டது.
மன்னார்குடி அருகில்...: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி -- நீடாமங்கலம் சாலையில், மன்னார்குடிக்கு அருகில் திருப்பூவனுார் சதுரங்க வல்லப நாதர் கோவில் உள்ளது.இறைவன் சதுரங்க வல்லபநாதர், சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மைசூருக்குப் பின், இறைவி இங்கு தான் சாமூண்டீஸ்வரியாக, தனி சன்னிதியில் கோவில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் -