பதிவு செய்த நாள்
31
ஜூலை
2022
07:07
வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். வில்லியனுாரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
முக்கிய விழாவாக நேற்று ஆடிப்பூர தேரோட்டம் காலை 8:15 மணி அளவில் துவங்கியது. அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் பா.ஜ., பிரமுகர்கள் ஏகாம்பரம், கண்ணபிரான், தி.மு.க., ராமசாமி, செல்வநாதன், மணிகண்டன், ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நான்கு மாடவீதி வழியாக சென்ற தேரை பொதுமக்கள், சிவனடியார்கள் மற்றும் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் உற்சவதாரர்கள் செய்தனர்.