பதிவு செய்த நாள்
01
ஆக
2022
03:08
மதுரை. ஆகஸ்ட் 1, 2022 : மதுரையில் இருந்து ஷீரடிக்கு வருகிற ஆக்ஸ்ட் 21ம்தேதி உலா ரயில் புறப்பட விருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியது.
இந்தியன் ரயில்வே மற்றும் டிராவல் டைம்ஸ் இடையிலான அரசு தனியார் கூட்டுப் பங்களிப்புடன் கூடிய முதல் பாரத் கவுரவ் ரயிலின் உலா ரயில் கடந்த ஜூலை 4, 2022 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. உலா ரயிலின் இரண்டாவது பயணம் மதுரை டூ ஷீரடிக்கு ஏற்பாபாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து 21.08.2022 காலை 7.45 மணிக்கு புறப்படும் ரயில் ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம், ஹைதராபாத், சனி சிங்கனாப்பூர், திரையம்பகேஷ்வர், பஞ்சவடி இராமானுஜர் சிலை ஆகிய இடங்களுக்குப் பயணிக்கிறது. 9 நாட்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தின் படி, 29ம்தேதி மதியம் 1.30 மணிக்கு உலா ரயில் மதுரை வந்தடையும்.
இந்த உலா ரயில் 3 ஏசி கோச்கள், 6 2 எஸ்எல் கோச்கள், சுவையான தென்னிந்திய சைவ உணவு சமைக்க 2 பேன்டரி கார்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதேப்போல தங்குமிடத்தில் ஏசி/என்ஏசி/ஹால் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்போர்ட், ஸ்டாண்டர்ட், பட்ஜெட் என 3 வகையில் கட்டணங்கள் செலுத்தி பயணிக்கலாம். பயணக் கட்டணம் ரூ.16,900 முதல் ரூ.30,000 வரை ஆகும். 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 7,500 முதல் ரூ.16,000 வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பயணிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயண வகையைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தியன் ரயில்வே உலா ரயில் முன்பதிவுக்கு www.ularail.com மற்றும் 7305858585 எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.