பதிவு செய்த நாள்
01
ஆக
2022
04:08
நாக சதுர்த்தியை முன்னிட்டு திருமங்கலம் துளசி மணி ஐயப்பன் கோவிலில் உள்ள பஞ்சமுக நாகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி நாளாகும். இந்நாளைப் பற்றி சதுர்வாக சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு எனும் உணவுப்பொருளை தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள். இந்த நாகசதுர்த்தி நாளில் நாகர்கோயில் நாகராஜா கோயில், பரமக்குடிநயினார்கோயில், நாகப்பட்டினம்நாகநாதர்கோயில் மற்றும் கும்பகோணம்நாகநாதர் கோயில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாளில் அஷ்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தோசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.
ராகு கேது தோசங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிசேகம் செய்கின்றனர்.சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிசேகம் செய்கின்றார்கள். ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். இந்தநாளில் விரதமிருந்து நாகப் பிரதிகளுக்கு பூசை செய்கின்றனர். இந்த விரதத்தினை நாகசதுர்த்தி விரதம் என்கின்றனர். நாகங்கள் தீண்டி இறந்த சகோதர்களுக்கு உயிர் தர ஒரு பெண் நாகராஜனை வேண்டிக்கொண்டாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை இந்நாளின் தொன்மமாக கருதுகிறார்கள்.