ஒரு பெண் எப்படி பிறந்த வீட்டை விட, புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பாலோ... அதுபோல் கர்நாடகத்தில் பிறந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பவள் காவிரி. இவள் வரும் வழியெங்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பொன் விளையும் பூமியாக்குகிறாள். அதுமட்டும் இல்லை. பல்வேறு திருத்தலங்களை நோக்கி பயணமாகும் இவள் புண்ணியத்தையும் சேர்க்கிறாள். வாருங்கள்... நாமும் அவளுடன் சேர்ந்து கொள்வோம். * பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் இவளை, அங்குள்ளவர்கள் அம்மனாகவே வழிபடுகின்றனர். இதுதான் தலைக்காவிரி எனப்படுகிறது. * பின்பு மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரங்கநாதரை சேவிக்கிறாள். * இப்படி புதுமணப்பெண் போல உற்சாகமாக தமிழ்நாட்டில் கால்வைக்கும் இடம் ஒகேனக்கல். இங்கு ‘தேசனே! தேனார் அமுதே சிவபுரனே’ என்று தேசநாதீஸ்வரரை வந்தனம் செய்கிறாள். * அடுத்து சேலம் மாவட்டம் காவேரிபுரத்தில் ஜலகண்டேஸ்வரரிடம் தனது வருகையை தெரிவிக்கிறாள். பிறகு அவள் மேட்டூர் சொக்கநாதரை நோக்கி பயணமாகிறாள். * வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி ஆறு இரண்டும் சங்கமிக்கும் இடத்தை ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. அங்கு ஆகாய மார்க்கமாக சரஸ்வதி சங்கமிப்பதால் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல இங்கும் காவிரியுடன் பவானி ஆறும், ஆகாய மார்க்கமாக அமிர்த ஆறும் சங்கமிக்கன்றன. எனவே இது ‘தென் திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. இங்கு பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரரின் பாதங்களில் சரணடைகிறாள். * பின் இதைத்தொடர்ந்து கருர் பசுபதீஸ்வரரை பார்க்க ஓடோடி வருகிறாள். * இப்படி பலரது தாகங்களை தவித்த அவள், தனது பிறவி தாகத்தை தணிக்க திருச்சி ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறாள். * அடுத்து என்ன... கல்லணையை கடந்து தஞ்சைக்குள் தஞ்சம் புகுகிறாள். எதற்காக? பெருவுடையாரின் தரிசனம். ஆம்... இவ்வளவு துாரம் பயணப்பட்டு வந்தவளுக்கு அலுப்பு இருக்குமல்லவா... பெருவுடையார் தரிசனம் மூலம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறாள். * பிறகு புதுவெள்ளமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புகுந்து வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறாள். இப்படி பாயும் இடங்களை எல்லாம், பவித்திரமாக்கும் காவிரியை ஆடிப்பெருக்கு நாளில் வணங்குவோம். இந்த நதியைப் போல நாமும் வாழ்ந்து, பிறருக்கும் பயன் தருவோம்.