சபரிமலை ஸ்ரீகோயில் மேற்கூரையில் பழுது நாளை முதல் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2022 05:08
நாகர்கோவில், நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது. ஸ்ரீகோயில் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணியும் நாளை தொடங்குகிறது. சபரிமலை மூலஸ்தானம் அமைந்துள்ள ஸ்ரீகோயில் மேற்கூரையில் பழுது ஏற்பட்டு மழை நீர் கோயிலுக்குள் வர தொடங்கியுள்ளது. இதை சீரமைக்க ஐயப்பனின் அனுமதியும், தந்திரியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. நாளை காலை ஸ்ரீகோயிலின் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு பழுது நீக்கும் பணி தொடங்கும். 45 நாட்கள் வரை இந்த பணி தொடர்ந்து நடைபெறும். ஸ்ரீகோயிலின் மேற்கூரை தங்க தகடுகளால் வேயப்பட்டுள்ளதால், பழுது நீக்க தேவையான தங்கம் மற்றும் செலவு தொகை தேவசம்போர்டு நிதியில் இருந்து செலவு செய்யப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் கூறினார். இந்த பணிகளுக்காக தேவசம்போர்டு ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிறைபுத்தரிசி பூஜைக்காக நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நான்காம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.