ராமநாதபுரம் மாவட்டத்தில் முற்காலபாண்டியர் கால நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2022 10:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சியில் முற்கால பாண்டியர் காலத்து பெண்ணின் உருவம் செதுக்கப்பட்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பம் குறித்து வரலாற்று ஆய்வாளர் சக்திபாலன் தகவலையடுத்து, பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் ஜெ.செல்வம், தேவாங்கர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் சிற்பத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியது:முற்கால பாண்டியர் காலத்து சிற்பமாக உள்ளது. ஒரே பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கும் கலாசாரம் தெற்கில் பாண்டிய நாட்டிலும், வடக்கில் பல்லவ நாட்டிலும் பரவி இருந்தது. இந்த நடுகல்லானது அரச குடும்பத்து மகளிர் அல்லது உயர்குடி பெண்ணிற்காக வடிக்கப்பட்டது.பெண்ணின் உருவத்தில் வலது கையில் ஏதோ பொருளை வைத்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் கையில் இருப்பது என்ன பொருள் என்பது தெளிவாக தெரியவில்லை.அந்த பெண்ணின் இடது கை அவரது குழந்தையின் தலையில் கைவைத்து அரவணைப்பது போல் உள்ளது. அவரது வலது கைக்கு கீழே பெண்மணி ஒருவர் கையில் சாமரம் வீசுவது போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்து மகளிர் அல்லது உயர்குடி பெண்களுக்குத்தான் இதுபோன்ற சிற்பங்கள் வடிப்பது வழக்கம்.