திருப்புத்தூர்: திருப்புத்தூரில் அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு நகரில் பரவலாக பெண்கள் பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர்.
திருப்புத்தூர் நடுத்தெரு கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வளர்பிறை செவ்வாயில் காப்பு கட்டி விழா துவங்கி பாரி வளர்க்கப்பட்டது. தினசரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை கோயிலிருந்து பெண்கள் பாரி எடுத்து திருத்தளிநாதர், கோட்டைக் கருப்பர் கோயில் வழியாக சென்று சீதளிக்குளத்தில் கரைக்கப்பட்டது. இதே போன்று நான்கு ரோடு முத்துமாரியம்மன் அம்மன் கோயிலிலிருந்து பெண்கள் பாரி எடுத்து நகரின் முக்கிய கோயில்களுக்கு சென்று ஊர்வலமாக சென்று சீதளி குளத்தில் பாரியை கரைத்தனர். பூமாயி அம்மன் கோயிலிலும் காப்புக் கட்டி விழா துவங்கி பெண்கள் பாரி எடுத்து அம்மன் குளத்தில் கரைத்தனர். பிரபாகர் காலனி மாரியம்மன் கோவிலிலும் முளைப்பாரி விழா நடந்தது.