பதிவு செய்த நாள்
17
ஆக
2022
11:08
திருத்தணி:ஆடி மாத ஜாத்திரையையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அம்மன் கோவில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில், நேற்று ஜாத்திரை நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாலை 4:00 மணிக்கு பூ கரகம், பைபாஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக, தணிகை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தது.இரவு 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திருத்தணி, மேட்டுத் தெரு எல்லையம்மன், அக்கைய்யாநாயுடு சாலை தணிகாசலம்மன், எம்.ஜி.ஆர்.,நகர் எல்லையம்மன், பெரியார் நகர் அம்மன், சுப்பிரமணிய நகர் துர்க்கையம்மன், காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி அம்மன் மற்றும் புறவழிச்சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் உட்பட திருத்தணி நகராட்சியில் உள்ள அம்மன் கோவில்களில் ஜாத்திரை நடந்தது. விழாவை ஓட்டி, காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு அம்மன் ஊர்வலம் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு நாடகம் நடந்தது.