பதிவு செய்த நாள்
19
ஆக
2022
01:08
பழநி: பழநி மலைக்கோயில் உட்பிரகாரத்தில் பொதுமக்கள் அதிகாலை நேரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.
பழநி மலைக்கோயில் வரும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து வருகின்றனர். இதில் தீர்த்த காவடி, மயில் காவடி, பறவை காவடி, முடி இறக்குதல், அழகு குத்தி வருதல், போன்றவைகள் முக்கிய நேர்த்திக்கடன்கள் ஆகும். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை ஆக வருவது வழக்கம்.
பழநி மலைக்கோயில் வரும் பக்தர்கள் படி பூஜை, வெளிப்பிரகாரத்தில் அடிஅளந்து நடத்தல், அங்கப் பிரதட்சணம் செய்வது உள்ளிட்ட நேர்த்திக்கடன்களும் நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் பலர் மலைக் கோயிலில் கூட்டம் குறைவாக உள்ள சமயங்களில் வெளி பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து வருகின்றனர். இதே போல் உட்பிரகாரத்திலும் அதிகாலை 5:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் பக்தர்கள், கோயில் அதிகாரிகள் அனுமதியுடன் அங்க பிரதேசம் செய்து கொள்ளலாம். மேலும் மலைக் கோயிலில் கூட்டம் அதிகம் உள்ள நாட்களிலும் விசேஷ நாட்களிலும் உட்பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை.