பதிவு செய்த நாள்
20
ஆக
2022
09:08
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ராமானுஜர் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதியில் பழமைவாய்ந்த, ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, அத்தி மரத்தால் செய்யப்பட்ட ரங்கநாதர் அத்தி ஆனந்தரங்கநாதராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்தி அனந்தரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பிரபந்த சேவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில், நேரு எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில், சிறுவர்களின் ராதா-கிருஷ்ண பிருந்தாவன வைபவம், பாகவதோத்மர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்ற கோலாகல பஜனையுடன் சுவாமி உள்புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம், திவ்யநாம சங்கீர்த்தனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் எதிர்கட்சி தலைவர் சிவா கலந்து கொண்டு உறியடி உற்சவத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்தார். விழா ஏற்பாடுகளை, பஜனை மடத்தின் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.