சாமி தோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2022 02:08
தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமியின் தலைமைப்பதியும் ஒன்றாகும். இங்கு ஆவணி, தை மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். உச்சிப்படிப்பு, பணிவிடைகளை பையன் கிருஷ்ண நாம மணி செய்தார். மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 29ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைப்பதி முன்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.