பதிவு செய்த நாள்
21
ஆக
2022
07:08
சென்னை : சோழர் காலத்தைச் சேர்ந்த நடன சம்பந்தர் சிலை, அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், தண்டந்தோட்டம் கிராமத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில், 13ம் நுாற்றாண்டு சோழர் காலத்து நடன சம்பந்தர், கிருஷ்ண கலிங்க நர்த்தனம், அய்யனார், அகஸ்தியார், பார்வதிதேவி சிலை ஆகியவை, 1971ல் திருடப்பட்டன. அப்போது அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், 2019ல் அப்பகுதியைச் சேர்ந்த வாசு என்பவர் அளித்த புகாரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அதில், நடன சம்பந்தர் வெண்கல சிலை, அமெரிக்காவில் பழங்கால கலை பொருட்களை விற்பனை செய்யும் கிறிஸ்டிஸ் நிறுவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் காணாமல் போன நடன சம்பந்தர் சிலை என்பதை, போலீசார் உறுதி செய்தனர். இந்த நடன சம்பந்தர் சிலை 34.3 செ.மீ., உயரம் கொண்டது. இந்த சிலையின் தற்போதைய மதிப்பு 1.92 கோடி ரூபாய்.இந்த சிலையை, இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி மீட்டு, தமிழகம் எடுத்து வரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே, 1.6 கோடி ரூபாய் மதிப்பிலான பார்வதிதேவி சிலை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.