மனதில் ஆசை எதையும் வளர்த்துக் கொள்ளாமல் குறிக்கோளை நோக்கி முன்னேறுபவனை வைராக்கியசாலி என்பர். துறவிகளுக்கு வைராக்கியம் மிகவும் அவசியமான குணம். இறைவனை நேரில் காண விரும்பிய ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் வைராக்கிய சாலிகளாகத் திகழ்ந்தனர். அதனால் தான், அவரால் காளிதேவியுடன் பேச முடிந்தது. வடமொழியில் ராகம் என்றால் ஆசை. ராகத்தில் இருந்து முற்றிலும் நீங்கிய நிலை வைராக்கியம். வடநாட்டில் சந்நியாசம் பெற்ற ஆண்டிகளைபைராகி என்று குறிப்பிடுவர். வைராகி (வைராக்கியம்) என்பதே அங்கு பைராகி எனப்படுகிறது. தமிழகத்தில் உதித்த ஞானிகளில் சிறந்த வைராக்கியசாலி பட்டினத்தார். குபேரனின் அம்சமாகப் பிறந்த இவர், கடல்வாணிபம் செய்த பெரும் பணக்காரர். இவருடைய மகனாக சிவபெருமானே வந்து பிறந்தார். பணம் பெரிது என்ற இவரது அஞ்ஞானத்தைப் போக்கினார். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று ஓலையில், இவரது மகன் எழுதிய வார்த்தை யைக் கண்டு கலங்கிப் போனார். செல்வத்தை துச்சமென தூக்கி எறிந்து விட்டு திருவோட்டுடன் புறப்பட்டார். பின், அந்த திருவோட்டை வைத்திருப்பதும் இழுக்கு என எண்ணி கீழே போட்டு உடைத்து விட்டு திருவாலங்காடு சென்றார். பட்டினத்தாரின் பாடல்களைப் படிப்பவர்கள் செல்வம் பெரிதல்ல என்ற வைராக்கியம் பெற்று பணத்தை தூக்கி எறிவர்.