பதிவு செய்த நாள்
30
ஆக
2022
01:08
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரணி நகர் கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் அன்னை ஓம் பவதாரணியின் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரணி நகர் கருமாரியம்மன், காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரேஸ்வரர், வித்யா கணபதி, சுப்ரமண்யர், நுாதன சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் மகா கும்பாபிஷகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 27ம் தேதி காலை 4 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும், 28 ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் 25ம் குரு மகா சந்நிதானங்கள் கயிலை புனிதர் முனைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் துவங்கியது. 9.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், தொடர்ந்து யாத்ரா தானமும், 9.45 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 9.45 மணிக்கு அன்னை ஓம் பவதாரிணி முன்னிலையில் ஆச்சாள்புரம் சிவ ஸ்ரீஞானஸ்கந்த சிவாச்சார்யார் தலைமையில் விமான மஹா கும்பாபிஷகமும் தொடர்ந்து அனைத்து மூலவருக்கும் மஹா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு அன்னை ஓம் பவதாரணி இயற்றிய சிங்கபுர வரலாறும் அரங்கனின் பெருமையும் என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. திருவண்ணாமலை பகவான் யோகிராம் சுரத்குமார் அறக்கட்டளை வாழ்நாள் அறங்காவலர் மாதேவகி முன்னிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நுாலை வெளியிட்டார். அன்னை ஓம் பவதாரணி ஆசியுரை நிகழ்த்தினார். இதில் முன்னாள் ஒன்றிய சேர்மன் ரங்கநாதன், ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, தொழிலதிபர்கள் கோபிநாத், பாபு, பிரேம்குமார், கட்டிட வடிவமைப்பாளர் மைதிலி ஜெயச்சந்திரன், பொறியாளர் சந்தானகிருஷ்ணன், உதவி பேராசிரியர் மகேஸ்வரி, ஸ்வேத பத்மாசனி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி தாளாளர் உமா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அன்னை ஓம் பவதாரணி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.