பதிவு செய்த நாள்
03
செப்
2022
07:09
திருமங்கலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் திருமங்கலம் பகுதிகளில் 12 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நேற்று இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தை பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது "இத்தனை விநாயகர் சிலைகளை வைத்துக்கொண்டு ஊர்வலமாக நாம் செல்லும் போது நிச்சயம் விநாயகர் தி.மு.க.,விற்கு நல்ல புத்தியை கொடுப்பார். தற்போது தி.மு.க., பேச்சை கேட்கும் காவல்துறை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகு நமது பேச்சை தான் கேட்கும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி தான் நடக்கும். கோவிலை இடிக்க வேண்டும் கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட்டது என்று கூறியவர்கள் தான் இன்றைக்கு பதவியில் இருக்கிறார்கள் என்றால் இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதால் தான். அதையெல்லாம் இந்த விநாயகர் தீர்த்து வைப்பார் என நம்புவோம் என்றார்.
திருமங்கலம் ராஜாராம் தெருவில் ஆரம்பித்த ஊர்வலம் மதுரை ரோடு, உசிலம்பட்டி ரோடு வழியாக குண்டாறில் கரைப்பதற்கு எடுத்துச் செல்லப்பட்டது ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சிலைகளை செங்குளம் கண்மாயில் கரைத்தனர். நிகழ்ச்சியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனர் திருமாறன், இந்து முன்னணி நகர தலைவர் பாலமுருகன், நிர்வாகி பெருமாள், பா.ஜ., மாவட்ட துணை தலைவர்கள் சரவணகுமார், ஓம்ஸ்ரீமுருகன், மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, பொருளாதார பிரிவு மாநில செயலாளர் நிரஞ்சன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சசிகுமார், ஒன்றிய தலைவர்கள் சரவணன், சுரேஷ், திருமங்கலம் நகர் தலைவர் தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், லதாலட்சுமி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.