பதிவு செய்த நாள்
06
செப்
2022
01:09
மேட்டுப்பாளையம்: சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த, கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் நகரில், பவானி ஆற்றின் கரை ஓரத்தில், மிகவும் பழமை வாய்ந்த, சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடைசியாக, 1984ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கடந்த ஆறு ஆண்களுக்கு முன்பு, கோவிலில் திருப்பணிகள் துவங்கின. கோவிலில் ஏற்கனவே உள்ள மூலவர் சன்னதியுடன், புதிதாக சிவன், அம்பாள், நவகிரக சன்னதிகளும், மகா மண்டபம், அர்த்த மண்டபம், தியான மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டன.
பின்பு, 38 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, 5ம் தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலை சுற்றியும், யாக சாலையை சுற்றியும், புனித நீர் ஊற்றி வேள்வி பூஜைகளையும், கும்பாபிஷேக பணிகளை துவக்கினர். நேற்று (5ம் தேதி) காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து, 6:40 மணிக்கு தீர்த்த கலசங்களை கோவிலை சுற்றி வந்து கோபுரங்களுக்கு எடுத்துச் சென்றனர். சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமி தலைமையில், கோபுர கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார சுவாமிகள் மீது, குருக்கள் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சுகி சிவம் குழுக்கள் தலைமையில், 20க்கும் மேற்பட்ட குருக்கள் யாகசாலை வேள்வி பூஜையில் ஈடுபட்டனர். இவ்விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், சுப்ரமணியர் கோவில் தலைமை அர்ச்சகர் தனசேகர் குழுக்கள், அர்ச்சகர் கண்ணன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை, பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை துறையினரும், திருமுருக வழிபாட்டு பக்தர்கள் குழுவினரும் செய்திருந்தனர்.