பதிவு செய்த நாள்
06
செப்
2022
01:09
மயிலாடுதுறை: கீழப்பெரும்பள்ளம் அங்காளம்மன் கோவில்கும்பாபிஷேகம் துர்கா ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் முதல்வரின் மகள், மருமகன் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா குடும்பத்தினரின் குலதெய்வ கோவிலாகும். பெரும் பொருட்செலவில் இக்கோவில் திருப்பணிகள் துர்கா ஸ்டாலினின் முயற்சியால் செய்து முடிக்கப்பட்டதுடன், புதிதாக கோவிலில் கொடிமரம், விநாயகர், ராகு, கேது விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2ம் தேதி பூர்வாங்க பூஜையுடன், முதல் காலை யாகசாலை பூஜைய தொடங்கியது. நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. அதனை அடுத்து துர்கா ஸ்டாலின் பச்சை நிற கொடியசைக்க, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினரும், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அமைச்சர் மெய்ய நாதன் எம்.எல்.ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் மட்டுமன்றி அரசு அதிகாரிகளும் கோவிலுக்கு வெளியே பக்தர்களுடன் பக்தர்களாக நின்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, ஆர்டிஓ அர்ச்சனா ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு எஸ்பி. நிஷா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.