அன்னூர்: பிள்ளையப்பன் பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. பிள்ளையப்பன் பாளையத்தில், பழமையான மாகாளியம்மன் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் சக்தி விநாயகர், செல்வ விநாயகர் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. அன்று இரவு பல்லடம் அனுப்பட்டி, வள்ளி முருகன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் 3ம் கால வேள்வி பூஜையும் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு, மாகாளியம்மன் மற்றும் சக்தி விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர். காலை 11:00 மணிக்கு அச்சம் பாளையம் குழுவின் பஜனை நடக்கிறது.