பதிவு செய்த நாள்
09
செப்
2022
11:09
சென்னை:கும்பகோணத்தில் உள்ள கோவில் ஒன்றில், 60 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன நான்கு வெண்கல சிலைகள், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சுந்தரபெருமாள் கோவில் என்ற கிராமத்தில், சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து, 60 ஆண்டுகளுக்கு முன் திருமங்கை ஆழ்வார், கிருஷ்ணா, விஷ்ணு, ஸ்ரீதேவி என, நான்கு வெண்கல சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இது குறித்து, கோவில் நிர்வாகி ராஜா, 2020ல் மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட சிலைகள், அமெரிக்காவில் உள்ள மூன்று அருங்காட்சியகத்தில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலைகள் சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானதுதான் என்பதற்கான ஆதாரங்களை, அந்த அருங்காட்சிய கத்திற்கு அனுப்பி உள்ளனர். விரைவில் சிலைகளை மீட்போம் என, நம்பிக்கை தெரிவித்தனர்.
கணக்குக்காக அறிவிப்பு?: தமிழக கோவில்களில் திருடுபோன சிலைகள் குறித்து, டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தலைமையில் ஆய்வு செய்து, அந்த சிலைகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது பாராட்டுக்குரியது. ஆனால், இவைகள் எல்லாம் வெற்று அறிவிப்பாக இருந்துவிடக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:சிலை கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகளை மீட்டு, உரிய கோவில்களுக்கு ஒப்படைக்க வேண்டும். சிலை மீட்பு பணிகளில் வேகம் காட்ட வேண்டும். திருடுபோன சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாக கண்டுபிடித்து விட்டோம் என அறிவிப்பது, கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது.அதுவும், வாரந்தோறும் ஒரு அறிவிப்பு என கணக்கு காட்டுவது, சற்று நகைப்புக்குரியதாக தான் இருக்கிறது. உண்மையிலேயே சிலைகள் கணக்கெடுப்பு நடக்கிறதா, புகார்கள் முறையாகப் பெறப்படுகிறதா, நிஜமாகவே கண்டுபிடிக்கப்படுகின்றனவா என்றெல்லாம் சந்தேகம் எழுகிறது.மேலும் சில வாரங்களுக்கு முன் காட்டப்பட்ட கண்டுபிடிப்புகளில் உள்ள சிலைகள், கலைநயம் மிக்கதாகத் தெரியவில்லை. இந்த சந்தேகத்துக்கு, ஜெயந்த் முரளி பதில் அளிப்பார் என நம்புகிறோம்.இவ்வாறு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.