சதுரகிரியில் கருப்பண்ணசாமி கோவில் வரை தினமும் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2022 08:09
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையடிவாரத்தில் கருப்பண்ணசாமி கோவில் வரை தினமும் பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென தாணிப்பாறை கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் சென்று வந்த நிலையில், 2015 இல் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு தற்போது பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள், கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் வருத்தம் அடைந்து வந்தனர். எனவே, தாணிப்பாறையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் வரை தினமும் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென அவர்கள் சார்பில் வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராமச்சந்திரன், வனம் நன்றாக இருந்தால்தான் மழை பெய்து, நாடு செழிக்கும். உங்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறேன் என தெரிவித்தார்.