பதிவு செய்த நாள்
14
செப்
2022
05:09
போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் I விரிவு பகுதியில், சிவன் கோவில் உள்ளது. வீட்டு வீதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட இப்பகுதியில், நர்சரி பள்ளி கட்ட, 43 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. அவ்விடத்தில்தான் சுமார், 6.000 சதுரடி பரப்பில் மேற்குறிப்பிட்ட சிவன், முருகன், விநாயகர் அமையப்பெற்ற கோவில் உள்ளது.
பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற கோரி, ராஜதுரை என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017 ல் கோவிலை அகற்ற, ஹைகோர்ட் வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதுநாள் வரையிலும் அகற்றப்படாததால், வீட்டு வாதி வாரியம் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு போடப்பட்டது. இதையடுத்து நேற்று கோவில் அகற்றப்படும் என கோவை வீட்டு வசதி வாரிய பிரிவு செயற்பொறியாளர் கோவில் கமிட்டிக்கு தகவல் அனுப்பினார். இதனால் நேற்று முன்தினம் அப்பகுதியினர், அரசியல். கட்சியினர், ஹிந்து அமைப்பினர் கோவிலில் திரண்டனர். வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் எட்வின் சுந்தர் சிங், போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் அனைவரிடமும் பேசினர். கோவிலை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என அனைவரும் கூறினர். தொடர்ந்து பெண்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பக்தி பாடல்களை பாட துவங்கினர், நேற்று காலை வரையிலும் இந்நிகழ்ச்சி தொடர்ந்தது.
தொடர்ந்து நேற்று காலை கோவிலுக்கு வந்த வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் எட்வின் சுந்தர் சிங், மதுக்கரை தாலுகா தாகில்தார் பர்சானா, வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, வி.ஏ.ஓ., விஜயகுமார் உள்ளிட்டோர் கோவில் கமிட்டி உப தலைவர் சந்திரசேகர், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வசந்தராஜன், கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேனாதிபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், மண்டபம், தேர் மண்டபம் ஆகியவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மண்டபத்தின் மேற்கூரையும், தேர் மண்டபம் முற்றிலும் அகற்றப்பட்டன. காலை, 11:00 மணிக்கு துலங்கிய இப்பணி மாலை, 3:45 மணியளவில் முடிவுக்கு வந்தது. இதனையொட்டி கோவிலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் பேரிகார்ட் போடப்பட்டு, போலீசார் நிறுத்தப்பட்டனர். வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மூன்று வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு துறையின் தலா ஒரு சிறிய, பெரிய வாகனங்கள் முன் எச்சரிக்கையாக நிறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபடுவோரை அழைத்து செல்லவும் வாகனங்கள் தயார் நிலையில் காத்திருந்தன. மாநகர ஆயுதப்படை சிறப்பு படை மற்றும் உள்ளுர் போலீசார் என, 250 பேர் பாசகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு நாட்கள் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்ததால் அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.