பதிவு செய்த நாள்
15
செப்
2022
09:09
சென்னை: மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில்கள் உள்ளிட்ட மூன்று கோவில்களை, நீதிமன்ற உத்தரவையும் மீறி பாதிப்பிற்குள்ளாக்குவது பக்தர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில், 800 ஆண்டு பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளன. சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாதவரம்- - சோழிங்கநல்லுார் வழித்தடத்தால் இக்கோவில்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோயம்பேடில் இருந்து வரும் மெட்ரோ வழித்தடம், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலின் மேல், கொடிமரத்தை ஒட்டி செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, காளியம்மன் கோவிலின் குளமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தில், துாண் எழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினரை சந்தித்த ஆன்மிக நல விரும்பிகள் மற்றும் பக்தர்கள், கோவிலின் மேலே செல்லாதவாறு மெட்ரோ ரயில் வழித்தடத்தை மாற்றிமைக்க வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.சென்னை, பரங்கிமலையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது, அறநிலையத்துறை கட்டுபாட்டில், வடபழநி கோவில் நிர்வாகத்தின் உப கோவிலாக இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலின் வலது புறம் பால்வெல்ஸ் சாலையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கோவில் வளாகத்தில் குறியிட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை ௮ மீட்டர் துாரம் நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதால், கோவின் பழமையான மதில்சுவர், உட்பிரஹாரம் ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இதுபோன்று கோவில்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்மிக நல விரும்பி கவுதமன் கூறியதாவது: மெட்ரோவின் முதல் கட்ட திட்டத்தின் போது அசோக் நகர் ரயில் நிலையத்துக்காக, 500 ஆண்டுகள் பழமையான மல்லிகேஸ்வரர் கோவிலை எந்த அறிவிப்பு மின்றி மெட்ரோ நிறுவனம் எடுத்துக் கொள்ள முயன்றது. அப்போது, பக்தர்கள் எதிர்த்து போராடியதால் கோவில் மட்டும் மிஞ்சியது.எழும்பூர் ரயில் நிலையம் அமைப்பதற்காக, ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலின் நிலத்தை கையகப்படுத்திய பிறகே, அதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. இதுபோன்ற பல தவறுகள் நடந்திருக்கின்றன.சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் மேல் அமைக்கவிருக்கும் வழித்தடத்திற்கு இ- - மெயில் வாயிலாக பக்தர்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
வழித்தட அமைப்பை மாற்றி அமைக்குமாறு, 2020 டிச., மாதம் விண்ணப்பம் கொடுத்திருந்தோம். அதைத் தொடர்ந்து மெட்ரோ நிறுவன அதிகாரிகளுடன் பல விவாதங்கள் நடந்தன. அதன் பிறகும் ஒரு தலை பட்சமாக சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் மேலேயே வழித்தடத்தை அமைத்திட திட்டமிட்டனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவிலுக்கும், புராதன சின்னங்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்பட கூடாது என தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் திட்டத்தை மாற்றுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். இப்போது, கோவிலின் உள்ளே மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமான குறிகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். ஆலயம் காப்போம் இயக்கத்தின் தலைவர் ரமணன் கூறியதாவது:பூந்தமல்லி, வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை கையகப்படுத்தப் போவதில்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதியளித்தது.
தற்போது, அதற்கு முரணாக பழைய படி திட்டங்களை தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. வரும் காலங்களில் இக்கோவிலின் தெப்ப, தேர் உற்சவம், பிரம்மோற்சவம் ஆகியவை நடப்பதற்கு இது பெரும் தடையாக இருக்கும்.கோவில்களின் நலனை பாதுகாக்க வேண்டிய அறநிலைய துறையினர் அதைப்பற்றி கவலைப்படாமல் இதற்கு துணை போகின்றனர். இது ஹிந்து பக்தர்களுக்கு தெரிந்தே இழைக்கப்படும் பெரும் தீங்கு. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் --