பதிவு செய்த நாள்
18
செப்
2022
09:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று புரட்டாசி சனிக்கிழமை விழா துவங்கியது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு புரட்டாசி சனிக்கிழமை விழாவும், மாசி மக தேர்த்திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, தாசர்களுக்கு படையலிட்டு, பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று (18ம் தேதி) பிறக்கிறது. ஆனால், நேற்று சனிக்கிழமையை (17ம் தேதியை) புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை அடுத்து நேற்று காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா துவங்கியது. அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், வெண்பட்டு குடை சூழ, வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலில் வளம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு கால சந்தி பூஜை, உச்சகால, இரவு ராக் கால பூஜைகள் நடந்தன. விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தர்கள், அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.