பதிவு செய்த நாள்
19
செப்
2022
11:09
திருப்பதி: திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ வாகன சேவையின் போது, எப்போதும் காளைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் அணிவகுப்பு அனைவரது கவனத்தையும் எளிதில் கவர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன. திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ கொண்டாட்டம், வரும் 27ல் துவங்குகிறது.
கண்களுக்கு விருந்து: திருமலையில் பிரம்மோற்சவ வாகன சேவை என்றால் முதலில் வருவது பிரம்ம ரதம். பிரம்மன் நடத்தும் உற்சவம் என்பதால், இது பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. எனவே, பிரம்மன் தேரில் அமர்ந்து பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை நேரில் காண்பதாக ஐதீகம். அதன் பின் அழகாக அலங்கரித்த காளைகள், குதிரைகள், யானைகள் என, முதலில் இவற்றின் அணிவகுப்பு மாடவீதி யில் வாகன சேவையை காண காத்திருக்கும் பக்தர்களை கவரும். அழகாக அலங்கரிக்கப்பட்ட இந்த விலங்குகள் மெதுவாக முன்னேறி, இறைவனின் வருகையை பறைசாற்றுகின்றன. இவைகள் மேள தாளத்திற்கு ஏற்ப நடக்கும் நடை, கால்களை மாற்றி ஆடும் ஆட்டம் உள்ளிட்டவை பக்தர்களின் கண்களுக்கு விருந்தளித்து மகிழ்விக்கின்றன. இந்த விலங்குகள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசம்ரக் ஷனசாலாவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
யானைகள்: சனாதன தர்மத்தில், யானைகள் அரசத்துவம், கம்பீரம், வலிமை, தெய்வீகம், மிகுதி, புத்திசாலித்தனம், ஆர்வம், அழிக்கும் சக்தி மற்றும் கிரகிக்கும் சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. மேலும் யானை செல்வம் மற்றும் செழுமையின் தெய்வமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியின் விருப்பமான வாகனம்ஆகும்.
குதிரைகள்: குதிரைகள் வேகம், அழகு, துாய்மை, சுதந்திரம், கருணை மற்றும் வலிமை ஆகியவற்றின் பரந்த சக்தியைக் குறிக்கின்றன. குதிரைகள் இந்திரன், சூரியன், வாயு, ருத்ரர்கள் மற்றும் மாருதி போன்ற பல தெய்வங்களுடன் தொடர்புடையவை. திருமலையின் வாகன சேவைகள் வருடாந்திர பிரம்மோற்சவமும் குதிரை வாகனத்துடன் நிறைவு பெறுகிறது.
காளைகள் : காளைகள் வலிமை, ஆக்கிரமிப்பு மற்றும் சண்டை சக்தியைக் குறிக்கின்றன. இது, ஹிந்து புராணங்களில் சிவபெருமானின் விருப்பமான வாகனம். மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தி வாகனம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் வழக்கம் போல் இந்த யானை, காளை, குதிரை அணிவகுப்பு நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:பிரம்மோற்சவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் விலங்குகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பாகன்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து யானைகளை கட்டுப்படுத்துகின்றனர். கால்நடைகளுக்கு சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அவை ஆரோக்கியமாக இருக்கும்போது மட்டுமே ஊர்வலங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகளுடன் விலங்கியல் நிபுணர்களும் உள்ளனர். எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் விலங்குகளை கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாட வீதிகளில் நுழைய யானைகளுக்கு சிறப்பு பாதையும் உருவாக்கப்பட்டுள்ளது. யானைகளை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.