பதிவு செய்த நாள்
20
செப்
2022
04:09
தொண்டாமுத்தூர்: தென்னமநல்லூரில், பட்டத்தரசியம்மன் கோவில் முன் வந்து படமெடுத்து நின்ற நாகப்பாம்பிற்கு பூஜை செய்து பாலூற்றி பொதுமக்கள் வழிபட்டனர்.
தென்னமநல்லூர், காந்தி காலனியில், பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சுமார், 50 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோவிலின் எதிரே உள்ள மழைநீர் வடிகால் காங்கிரீட் மீது சுமார், 3½ அடி உயரமுள்ள நாக பாம்பு வந்துள்ளது. இந்நிலையில், வெகுநேரமாக, நாகப்பாம்பு அங்கிருந்து செல்லாமல் படம் எடுத்து நின்றுள்ளது. இதுகுறித்து, அப்பகுதியில், தகவல் பரவியது. இந்நிலையில், காலை, 10:00 மணி ஆகியும் பாம்பு அங்கேயே இருந்தது. கோவிலின் நேர் எதிரில், பாம்பு படம் எடுத்து நிற்பது குறித்து தகவலறிந்த பெண்கள், அங்கு கூடினர். அதன் பின், பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் தூவி, பால் ஊற்றி, முட்டையும் வைத்து, கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். இந்நிலையில், அங்கிருந்தவர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பகல், 12:00 மணிக்கு, சம்பவ இடத்திற்கு போளுவாம்பட்டி வனச்சரக ஊழியர்கள், நாகப்பாம்பை பத்திரமாக மீட்டு, முள்ளாங்காடு வனப்பகுதியில் விடுவித்தனர். கோவில் முன் நாகப்பாம்பு படம் எடுத்து சுமார், 7 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.