கம்பம்: சபரிமலை அருகே எருமேலியில் விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தில் மண் பரிசோதனை துவங்கியுள்ளது.
கேரளாவில் கொச்சி, திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு ஆகிய ஊர்களில் விமான நிலையங்கள் உள்ளன. கம்பமெட்டு அருகே அணைக்கரை அல்லது இடுக்கியில் அமைக்க உத்தேசித்திருந்த விமான நிலைய பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதற்கு பதில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் சபரிமலை அருகே விமான நிலையம் ஒன்று அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த திட்டதை மறுபரிசீலனை செய்ய போவதாக அறிவித்தது, காரணம் தொழில் நுட்ப ரீதியாக காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக ரன்வே 2.7. கி.மீ. தூரத்திற்கு திட்டமிடப்பட்டதை காரணமாக தெரிவித்திருந்தது. இங்குள்ள கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் 3.4 கி.மீ. நீளத்திற்கும், கண்ணூர் 4 கி.மீ நீளத்திற்கும் ரன்வே உள்ளது. ஆனால் இங்கு 2.7.கி.மீ. தூரத்திற்கு அமைத்தால் எதிர்காலத்தில் மேம்பாட்டு பணிகள் செய்ய முடியாது என்றும், மத்திய அரசு அனுமதி தராது என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்திற்கான தனி அதிகாரி துளசிதாஸ் தற்போது 3.5 கி.மீ. ரன்வே அமைக்க உத்தேசித்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதன் காரணமாக தற்போது மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. செப். 19 ல் டில்லியில் இருந்து வந்துள்ள நிபுணர்குழுவினர் மண் பரிசோதனைக்கென மண் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எட்டு இடங்களில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு குழிகள் தோண்டி மண் சேகரிக்கப்படுகிறது. 21 நாட்களில் மண் பரிசோதனை முடிவுகள் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கான கன்சல்டன்ட் லூயிஸ் பெர்சர் நிறுவனத்திடம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ட்ரோன் மூலமாக விமானங்கள் இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என்றும் சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.