பதிவு செய்த நாள்
21
செப்
2022
07:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.
புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 23 பிரதோஷ நாள் முதல், நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். இதனையடுத்து நவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை மேலும் 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை நேற்று அறிவித்தது. இதன்படி தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும், இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது எனவும், வனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தாங்களே உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நவராத்திரி வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது புரட்டாசி அமாவாசை மற்றும் நவராத்திரி வழிபாட்டின் காரணமாக செப். 23 முதல் அக். 5 வரை, தொடர்ந்து 13 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது சதுரகிரி பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக நேற்று மாலை சிவகாசியில் சப் கலெக்டர் பிரித்திவிராஜ் தலைமையில் திருவிழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜ், வருவாய் துறை, வனத்துறை, தீயணைப்பு துறை உட்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.