பதிவு செய்த நாள்
22
செப்
2022
02:09
சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜையில், வெளிநபர்கள் அத்துமீறி இசைப்பது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கண்காணிப்பாளர் ஹரிபிரசாத், கடந்த வாரம், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு: சுகவனேஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜையில், கோவில் வாத்தியங்களான மேளம், நாதஸ்வரம், தவண்டை இசைக்கப்படும். ஆனால், சில நாட்களாக வெளிநபர்கள், சில வாத்தியங்களை எடுத்துவந்து, பள்ளியறை பூஜையில் இசைத்து கோவில் வழக்கத்துக்கு எதிராக செயல்படுகின்றனர்.
அவர்களிடம் கேட்டபோது, ‘எங்களை இசைக்க சொல்லி ராதாகிருஷ்ணன் கூறினார்’ என, பதில் அளித்தனர். அந்த நபர் பலமுறை கோவில் நலனுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவர், கோவில் அலுவலகம் முன் அனுமதியின்றி, 50 பேருடன் கூட்டம் நடத்தியுள்ளார். அதனால், வெளிநபர்களால் ஏற்படும் இடையூறில் இருந்து கோவில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் புகார் அளித்தது முதல், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மேற்கூறிய நபர்களே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா கூறுகையில், ‘‘புகார் குறித்து கூடுதல் விபரங்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கும் தகவல்படி, சம்பந்தப்பட்டோருக்கு, ‘சம்மன்’ அனுப்பி விசாரிக்கப்படும்,’’ என்றார்.