கதலி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பாலாலய பூஜைக்கு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2022 05:09
ஆண்டிபட்டி: ஜம்பலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பாலாலய பூஜைக்கான ஏற்பாடுகள் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 800 ஆண்டுகளைக் கடந்த பழமையான இக்கோயில் தேனி மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா, புரட்டாசி, மார்கழி வழிபாடுகளுடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகம் வந்து செல்வர். இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 15 ஆண்டுக்கு மேல் ஆகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை இன்னும் சில மாதங்களில் செய்து முடிக்க திட்டமிட்டு ஹிந்து அறநிலையத்துறை சார்பில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கோயில் செயல் அலுவலர் தங்ககலா, ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் ஐப்பசி மாத வளர்பிறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலாலய பூஜைக்குப்பின் கோயிலில் பழமை மாறாமல் கல் சுவர்களை சுத்தம் செய்தல், கோயில் சுற்றுச்சுவர் பராமரிப்பு, தரை தளங்கள் சீரமைத்தல், கோயிலின் மேல் பகுதியில் தட்டு ஓடு பதித்தல், மின் சீரமைப்பு பணிகள் ஆகியவை ரூ.30 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்கள் நன்கொடைகள் மூலம் கோயிலுக்கு தேவையான அனைத்து பணிகளும் முடிந்த பின் சில மாதங்களில் கும்பாபிஷேக பணிகள் துவங்கும். இவ்வாறு தெரிவித்தனர்.