பதிவு செய்த நாள்
28
செப்
2022
07:09
திருப்பூர்: பல்லடம் அடுத்த வெங்கிட்பாபுரத்தில் அருள்பாலிக்கும், 16 அடி உயரம் கொண்ட ஸ்ரீபிரத்தியங்கரா தேவி நவராத்திரியை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு, 16 அடி உயரத்தில் ஸ்ரீஅதர்வண பத்ரகாளியாக பிரத்தியங்கிரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் ஆறு கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள இக்கோவிலில், மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடந்து வருகின்றன. ஏவல், பில்லி, சூனியம், பயம் உள்ளிட்டவற்றை போக்கும் நிகும்பலா யாகம் இங்கு பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், செப்டம்பர் 26 முதல் நவராத்திரி விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, விக்னேஸ்வர பூஜை கோ பூஜை கலச பூஜை ஆகியவற்றுடன் நவராத்திரி விழா தொடங்கியது. மாலை 5 மணிக்கு காரிய தடைகள் நீக்கும் ஸ்ரீபிரத்தியங்கிரா லக்ஷ ஹோமம் நடந்தது. நவராத்திரியின் இரண்டாவது நாளான இன்று, திருமணத்தடை நீங்க, மண வாழ்வு சுகம் பெற, புது வீடு வாகனங்கள் வாங்க வேண்டி ஸ்ரீஸ்வயம்யவரா பார்வதி ஹோமம், ஸ்ரீஜெய துர்கா ஹோமம் ஆகியவை நடந்தன. நவராத்திரி முடியும் வரை தினசரி சிறப்பு ஹோமங்கள், வழிபாடுகள் நடைபெற உள்ளன.