மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு கிராமத்தில் சுந்தரவல்லி அய்யனார் கோவில் முளைப்பாரி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரிமண்டபம்,ராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனார் கோயில் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் ஒரு வாரத்திற்கு முன்பே முளைப்பாரிகளை வளர்க்க துவங்கினர். இதனைத் தொடர்ந்து மானாமதுரை வைகை ஆற்றுக்கு சென்று கோவில் பூசாரிகள் நீராடி வைகையாற்றின் நீரை கும்பங்களில் எடுத்து வந்து கரகத்தில் ஊற்றி பூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மாவிளக்கு எடுப்பது, கரும்பாலை தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்திய பின்னர் முளைப்பாரி ஓடுகளை தூக்கிக்கொண்டு கோயிலை வலம் வந்த பின்னர் ஊர்வலமாக கண்மாய்க்கு கொண்டு சென்று கரைத்தனர். பின்னர் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அன்னதானமும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அரிமண்டபம்,ராஜாக்கள் குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.