பதிவு செய்த நாள்
30
செப்
2022
10:09
சென்னை: சென்னை, திருவேற்காடில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோவில், சக்தி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் நவராத்திரி விழா, 26ம் தேதி முதல்
கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று, அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். 10 நாட்கள் நடக்கும் விழாவில், திருவிளக்கு பூஜை , ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, நாட்டியம், தினசரி கருமாரியம்மனுக்கு யாகம் நடத்தப்படுகிறது. இன்று இரவு 7:00 மணிக்கு வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசியின், ‘கருணை தெய்வம் கருமாரி’ எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. வரும் 4ம் தேதி இரவு 7:00 ம ணிக்கு பாரதி திருமுருகனின், அம்பிகையின் அருள் சிறப்பு வில்லிசை நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை , கன்னிப் பெண்களுக்கு கன்னியாபூஜை , பிரம்மச்சாரிகளுக்கு வடுகு பூஜை , சுமங்கலிக்கு சுவாஸினி பூஜை மற்றும் தம்பதிபூஜை ஆகியவை நடக்க உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் துணைக் கமிஷனர் ஜெயப்பிரியா செய்து வருகிறார்.