பதிவு செய்த நாள்
30
செப்
2022
01:09
சென்னை : வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு விழாவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார்.வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாள் அபிராமி அலங்காரத்தில், நேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.சக்தி கொலுவில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்கள் காட்சிக்கு அருகில் பக்தர்கள் ஒலியாக கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கியமான சக்தி பீடங்களின் படம், கொலு பகுதியில் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.தினமும் முதலில் வரும், 250 நபர்களுக்கு சுமங்கலி செட் பிரசாதமும், அம்மன், முருகர் கோவில்கள் அடங்கிய புத்தகமும், கோவில் பிரசாதமும் வழங்கப்படுகிறது.சக்தி கொலு நான்காம் நாள் விழாவை பழம்பெரும் நடிகை சச்சு, கோவில் அர்ச்சகர்களின் இல்லத்தரசிகள் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ர பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. நேற்று இரவு, ரமணனின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.