பதிவு செய்த நாள்
02
அக்
2022
10:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன் தினம் இரவு 11:30 மணி முதல் மலைஅடிவாரத்தில் பக்தர்கள் குவியத் வழங்கினார். நள்ளிரவு 1:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு திருமஞ்சனம், விஸ்வரூப சிறப்பு பூஜைகளை கோயில் பட்டார்கள் செய்தனர். பின்னர் ராஜ அலங்காரத்தில் இருந்து பெருமாளை தரிசிக்க 03:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கோவிந்தா, கோபால கோஷத்துடன் நீண்ட வரிசையில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10:30 மணிக்கு ஆண்டாள் கோயிலில் இருந்து சீனிவாச பெருமாள் புறப்பட்டு, திருவண்ணாமலை அடிவாரம் மண்டபம் வந்தடைந்தார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட சேவை, கிரிவலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு பஸ்கள் கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டது.500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செண்பகத் தோப்பு காட்டழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு சேதநாராயணப் பெருமாள் கோயில், அர்ச்சனாபுரம் ஸ்ரீதேவி, பூமாதேவி, அழகிய சாந்த மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் அர்ச்சனை அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பள்ளி காலாண்டு விடுமுறை துவங்கியுள்ளதால் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த பல ஆயிரம் பக்தர்கள், ஆண்டாள் கோயிலுக்கும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால் ரத வீதிகள், பஜார் வீதிகளில் வெளியூர் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஹோட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட பல்வேறு கடைகளில் வியாபாரம் களை கட்டியது.