பதிவு செய்த நாள்
03
அக்
2022
05:10
சோகம், பிசாசு அண்டாது இருக்க மஹா கவுரி வழிபாடு
நவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி நரசிம்மி வடிவில் இருப்பாள். அவள் ரத்த பீஜன் தேவியால் வதம் செய்யப்பட்ட தினமாகும். இதனால் அதற்கு ஏற்ப அலங்காரம் செய்வர். கரும்பு வில் பிடித்திருக்க, சுற்றிலும் அணிமா உள்ளிட்ட அஷ்ட சக்திகள் எழுந்திருக்க, கருணையுடன் தேவி இருக்கும் வகையில் கோவில்களில் அம்மனை அலங்காரம் செய்து வைத்திருப்பர். இந்த அலங்காரத்தில் அன்னையை நாம் வழிபட்டால், வேண்டிய எல்லா வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.நவராத்திரியின் எட்டாம் நாளை மஹா அஷ்டமி எனக் குறிப்பிடுவது வழக்கம்.
இன்று தான், துர்காதேவி அவதரித்த நாளாகும். ஹதுர்க்கம் என்றால் அகழி என்று பொருள். நம்மிடம் சத்துருக்களை நெருங்க விடாமல், அகழி போல் நின்று காப்பவள்.ஸ்ரீஆதி சங்கரர் அளித்த சவுந்தர்ய லஹரியில் 41வது பாடலைப் பாட வேண்டும்; இந்த வழிபாட்டால் எதிரிகளால் துன்பம் வராமல் காப்பாற்றப்படுவர்.நவராத்திரியின் ஒன்பது நாட்களும், ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ள வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். ரக்தபீஜன் வதமான பின், கருணை நிறைந்த தோற்றத்துடன் உள்ள அம்பிகையை பூஜிக்க வேண்டும். கூரிய நகங்களுடன், சங்கு, சக்கரதாரிணியாக சிம்மவாகனத்தில் காட்சி தருபவள். இந்தக் கோலத்தில் அஷ்ட சித்திகளும் புடைச்சூழ வீற்றிருக்கிறாள்.திரிசூலம் ஏந்தியவளாய், பாச அங்குசத்துடன் அலங்காரம் செய்து, மாவிலைத் தோரணம், மாக்கோலம் இட்டு, தாமரை, மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பழ வகைகளை படைத்து வழிபட, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். மதுரை மீனாட்சி சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளிப்பாள்.
மகிஷாசுரமர்த்தினியான அம்பிகை, அசுரனை வதம் செய்து, தர்மத்தை நிலை நாட்டினாள். அசுரனாக இருந்தாலும், உயிர்க்கொலை செய்ததால், தேவிக்கு பாவம் உண்டானது. இதைப் போக்க, சிவபூஜை செய்து பிராயச்சித்தம் தேடிக் கொண்டாள். அசுரனைக் கொன்றும், கோபம் தணியாமல் இருந்த அம்பிகையை குளிர்விக்க கோவில்களில் சாந்தாபிஷேகமும் நடக்கும்.
மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தவர்கள், சிவபூஜையையும் தரிசிக்க வேண்டும் என்று, இதனால் தான் சொல்கின்றனர். இந்த கோலத்தில் மீனாட்சியைத் தரிசிப்பவர்களுக்கு, நிறைந்த புண்ணியம் உண்டாகும். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட, அன்னையின் அருள் வேண்டும். மஹாகவுரியாக வணங்குவர். அந்த வடிவத்திலான துர்கை அம்மன், மிகவும் அழகாகவும், வெண்பனியைப்போல் வெள்ளையாகவும் இருப்பார் என நம்பப்படுகிறது. இந்த நாளன்று மகாகவுரியை வெண்ணிற நகைகளால் அலங்கரிப்பர். அமைதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மஹாகவுரி ஞானத்தை வெளிப்படுத்துவார்.
பூஜையின் மகிமை!: எட்டாம் நாள் பூஜையின் மகிமையை சொல்ல சொல்ல மெய் சிலிர்க்கும். இந்த பூஜையையும், வழிபாட்டையும் அதிபக்தியோடு செய்பவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவை அருகில் அண்டாது என்றும், அம்பிகையின் நாமத்தை உச்சரிப்பதால், மனிதன் புத்திர பவுத்திர விருத்தியையும், சுபிக் ஷத்தையும், தன விருத்தியையும் பெற்று, மிகுந்த
பாக்கியசாலியாகிறான் என்பதும் ஐதீகம்.
அபரிதமான சக்தி!: நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிக விஷேசமானதாக புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. துர்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று போற்றப்படும் இந்த மூன்று நாட்களில் அம்பிகையை ஆத்மார்த்தமாய் பூஜித்து, அனேகம் பேர் சொல்வதற்கரிய பலன்களைப் பெற்று உள்ளனர். குறிப்பாக, துர்காஷ்டமி என்றும் மஹாஷ்டமி என்றும் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் எட்டாம் நாள் அபரிதமான சக்தியைப் பெற்ற நாள் என்பது, அனுபவ பூர்வமாக பலரும் அறிந்த உண்மை.
நவராத்திரி பண்டிகை பெயர்கள்
ஆந்திரா - பத்துகம்மா பண்டுகா
கர்நாடகா - தசரா
கேரளா - கடைசி மூன்று நாட்கள் தசராகொண்டாட்டம்
உத்தரபிரதேசம் - ராம் லீலா
மேற்கு வங்காளம் -- துர்கா பூஜை
குஜராத் - தாண்டியா நடனமும்,கரவோ நடனமும் ஆடும் விழா
தமிழகம் - நவராத்திரி
மஹாராஷ்டிரா - தான்ய லட்சுமி பூஜை
ஹிமாச்சல பிரதேசம் - நவராத்திரி,
ராமநவமி, சமகரசங்கராந்தி
பஞ்சாப் - பண்டாரா
வழிபாடு: மஹா கவுரி ஆலயங்கள்: கண்க்ஹல், ஹரித்வார், உத்தரகண்ட் மாநிலம்
வாகனம்: வெண்மையான காளை
கோலம்: காசுக்கோலம் போட வேண்டும். புதிய சில்லரைக் காசுகளைக் கொண்டு, சிறிய பத்மம் கோலம் இடலாம்; நட்சத்திர வடிவத்தில் கோலமிட்டால் சிறப்பு.
நைவேத்தியம்: காலையில் சித்ரான்னம் (தேங்காய் சாதம் உட்பட பலவகை அன்னங்கள்), பாயசம், மாலையில்கொண்டைக்கடலை சுண்டல்மலர்கள்: ரோஜா, மரிக்கொழுந்து, தாமரை
ராகம்: புன்னாகவராளி
பாடல்:
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே!
கஷ்டமான காரியத்தையும் சிரமம் இல்லாமல் செய்து முடிக்கும் ஆற்றலைத் தரும் எட்டாம் நாள் வழிபாடுகள். வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து, தேவி நமக்கு ஏற்றத்தைத் தருவாள் என்பதும் நம்பிக்கை!
பக்தி சேரும்போது
சாதத்துடன் பக்தி இணையும் போது அது பிரசாதமாகிவிடும்
பட்டினியுடன் பக்தி சேரும் போது அது விரதமாகிவிடும்
தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்
பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்
இசையுடன் பக்தி சேரும் போது அது கீர்த்தனையாகிவிடும்
பக்தியில் இல்லம் திளைக்கும்போது அது கோவிலாகிவிடும்
செயல்களோடு பக்தி சேரும்போது அது சேவையாகிவிடும்
வேலையுடன் பக்தி சேரும்போது அது கர்மவினையாகிவிடும்
பிரம்மச்சாரியத்தோடு பக்தி சேரும்போது அது துறவறம் ஆகிவிடும்
இல்லறத்தோடு பக்தி சேரும் போதுதான் அது ஆன்மிகம் ஆகின்றது.
அப்படியான ஆன்மிகம் நமக்குள் ஏற்பட, இந்த நவராத்திரி வழிபாடுகளும், அம்மன் பூஜைகளும் நமக்கு வழிகாட்டுகின்றன.