சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா; அம்மன் அம்பு விடுதலுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 07:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா, ஆனந்தவல்லி அம்மன் அம்பு விடுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் திரண்டு வழிபட்டனர்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரே பெண் தெய்வமான ஆனந்தவல்லி அம்மனுக்காக கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவும், கடைசி நாளில் ஆனந்தவல்லி அம்மன் அம்பு எய்து மகிஷாசுர அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வாண்டும் செப்டம்பர் 26 முதல் துவங்கிய நவராத்திரி திருவிழா விஜயதசமி நாளான நேற்று சிறப்புடன் நடந்தது. ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் வில், அம்புடன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பெண்கள் முளைப்பாரியை கோயில் முன்வைத்து கும்மி வழிபாடு செய்தனர். பின்னர் காலை 11:00 மணிக்கு அம்மன், மகிஷாசுர அரக்கனை அழிப்பதற்காக பக்தர்கள் படையை சூழ சன்னதியை விட்டு வெளியேறினார். திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை குலவையிட்டு வரவேற்றனர். காலை 11:20 மணிக்கு கோயில் வளாகத்தின் வெளியே வாழை மர உருவில் மறைந்திருந்த மகிஷாசுர அரக்கனை அம்மன் அம்பு விட்டு அழித்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி, குலவையிட்டு ஆரவாரம் செய்தனர். பின்னர் சன்னதி திரும்பிய அம்மன் மீது பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். இரு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.