திருப்புத்தூர்: திருப்புத்தூரில் திருத்தளிநாதர் கோயில், பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா நிறைவை முன்னிட்டு நேற்று அம்பாள் அம்பு எய்தல் வைபவம் நடந்தது.
திருப்புத்தூரில் சிவன், பெருமாள், பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி உற்ஸவம் செப்.26 ல் துவங்கியது. கோயில்களில் கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசித்தனர். தினசரி உற்ஸவருக்கும், மூலவருக்கும் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிளக்கு பூஜைகளும் நடந்தன. திருத்தளிநாதர் கோயிலிலிருந்து நேற்று இரவு 7:00 மணி அளவில் மூலவர், உற்ஸவர் அம்பாளுக்கும் தீபாராதனை நடந்து அம்பாள் குதிரை வாகனத்தில் புறப்பாடானது. பின்னர் தேரோடும் வீதியில் எழுந்தருளி பக்தர்களின் கர கோஷத்திற்கு இடையில் அம்பாள் அம்பு எய்தினார். தொடர்ந்து அம்பாள் திருவீதி வலம் வந்தார். நேற்று இரவு பூமாயி அம்மன் கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு ஆகி, திருக்குளம் வலம் வந்தார். பின்னர் அம்பு எய்தல் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.