கருமத்தம்பட்டி: பெரிய மோப்பிரிபாளையம் சேத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த பெரிய மோப்பிரிபாளையம் சேத்து மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு ஆண்டு தோறும், புரட்டாசி மாதம் பொங்கல் விழா நடப்பது வழக்கம். கடந்த செப்., 27 ம்தேதி சாமி சாட்டுதலுடன் விழா துவங்கியது. அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று காலை சின்ன மோப்பிரி பாளையம் ஆதி விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு, முளைப் பாலிகைகளை பெண்கள் எடுத்து வந்தனர். வேலன் காவடி குழுவினரின் ஜமாப் இசை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் மற்றும் ஆலாம்பாளையம் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.