பதிவு செய்த நாள்
07
அக்
2022
10:10
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், ‘வேல்’ வைத்து பூஜை செய்யப்படுவதால், நாட்டில் போலி ஆன்மிகவாதிகள், அதிகார பலத்தால் தவறாக செயல்படுபவர்கள் அழிவர், அதர்மம் அழிந்து நன்மை பெருகும் என, பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட புகழ் பெற்ற ஸ்தலமாகும். இக்கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது, ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு, ‘காரணமூர்த்தி’ என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவன், பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி, அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
இதுவரை இங்கு, மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இரும்பு சங்கிலி, ருத்தராட்சம் என, பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருட்கள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன், 8 முதல் நிறைப்படி கம்பு வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர், குமரன் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற பக்தரின் கனவில் வேல் உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல், ‘வேல்’ வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, கோவில் சிவாச்சாரியார் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, வேல் வைக்கப்பட்டுள்ளது. முருகனிடம் உள்ள வேல் அதர்மம், தீமையை அழித்து மக்களை காத்ததுபோல், நாட்டில் அதர்மமும், தீமையும் அழிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். இதேபோல், கடந்த, 2019ல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், ‘வேல்’ வைத்து பூஜை செய்யப்பட்டது. தற்போது மீண்டும், ‘வேல்’ வைத்து பூஜை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.