ராமேஸ்வரம் கோயிலுக்குள் வெள்ளம் : அதிகாரி மெத்தனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2022 10:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அதிகாரிகள் மெத்தன போக்கால் வாறுகால் மூடி உடைத்ததால், மழைநீர் குளம்போல் தேங்கியது.
ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி மேற்கூரையில் விழும் மழை நீர் முதல் பிரகாரத்தில் இறங்கி, அங்குள்ள ஒரு அடி அகலமுள்ள வாறுகால் வழியாக வெளியேறும். சில சமயம் கன மழையால் வாறுகால் கொள்ளளவு தாங்காமல், அதில் இருந்து வெளியேறி பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது. இதனை தடுக்க 4 ஆண்டுக்கு முன் கோயில் நிர்வாகம் வாறுகாலை ஒரு அடி உயர்த்தி, அதன் மீது கான்கிரீட் மூடி அமைத்தனர். இதனால் பிரகாரத்தில் மழை நீர் தேங்கவில்லை.
இந்நிலையில் சுவாமி தரிசனம் முடித்து வரும் பக்தர்கள் வரிசையில் செல்ல வேண்டி இருமாதம் முன்பு உயர்த்திய வாறுகாலை அதிகாரிகள் உடைத்தெறிந்து, நடைபாதை அமைத்தனர். தற்போது இந்த நடைபாதையும் பயன்பாட்டில் இல்லை. இதனால் நேற்று முன்தினம் பெய்த மழையால் உடைத்தெறிந்த வாறுகால் வழியாக மழைநீர் வெளியேறி பிரகாரத்தில் குளம்போல் தேங்கியது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறுகையில் : கோயில் உள்கட்டமைப்புகள், இங்கு மேம்படுத்திய வசதிகள் குறித்து சக ஊழியரிடம் கருத்தறியாமல், வாறுகாலை உடைத்தெறிந்த செயல் அதிகாரியின் மெத்தன போக்கை காட்டுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து, வரும் காலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.