பதிவு செய்த நாள்
24
ஆக
2012
10:08
ஆலங்குடி: ஆவி பயத்தால் புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸுக்கு வேப்பிலை கட்டி ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து, ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், ஆவிகள், பேய்கள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும், திருவரங்குளம் ஆர்.எஸ்.பதி காடு, கொத்தமங்கலம், மேற்பனைகாடு, காவிரியாறு பாலம் வழியாகச் செல்கிறது. இந்த வழியாகச் செல்லும் போது, பஸ் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், மேற்பனைகாடு காவிரியாறு பாலத்தில் பைக்கில் சென்றவர்கள் மீது இந்த பஸ் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுப்பகுதியில் செல்லும்போது, இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். இரவு நேரங்களில் பெரும்பாலும் சில பயணிகளுடன் டிரைவர், கண்டக்டர் மட்டுமே தனியாக வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் பஸ் பழுதாகி நிற்பதால், இந்த பஸ்சில் பயணிக்க பயணிகள் பயப்படுகின்றனர். மேலும், டிரைவர், கண்டக்டர்களும் இந்த பஸ்சில் பணி செய்ய தயங்குகின்றனர். இந்த பஸ்சில், "ட்யூட்டி பார்க்க பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் தயங்குவதுடன், தங்களை வேறு பஸ்சுக்கு மாற்றித்தரும்படி கூறுகின்றனர். ஆனால், கோட்ட மேலாளர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பயந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புதுக்கோட்டையில் உள்ள அம்மன் கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவிலில் வைத்து வழிபட்ட எலுமிச்சை பழம், வேப்பிலையை பஸ் முன்னால் கட்டி, பஸ்சை ஓட்டி வருகின்றனர்.