பதிவு செய்த நாள்
23
அக்
2022
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தேர்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், நவ., 24-ல் கார்த்திகை தீப திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது.
தொடர்ந்து, 27-ல் சுவாமி தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் முதல்நாள் திருவிழா நடக்க உள்ளது. டிச., 3ல், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். டிச., 6-ல், அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், அன்று மாலை, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவில் முன், தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள, பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. கொரோனா தொற்றால் கடந்த இரண்டாண்டுகளாக, தேரோட்டம் நடக்காத நிலையில், தேரின் உறுதி தன்மையை அறியும் வகையில், சீரமைப்பு பணிகள் நடக்கிறது. பஞ்ச ரதங்களிலுள்ள சிற்பங்கள், அச்சாணிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும், அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் தடுக்கவும், 24 மணி நேரமும், சுழற்சி முறையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.