பதிவு செய்த நாள்
25
ஆக
2012
11:08
திசையன்விளை: திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா கோலாகலமாக நடந்தது.திசையன்விளை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை கொடை விழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு இக்கோயில் ஆவணி பெருங்கொடைவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது.விழாவில் முதல் நாள் பூஜை, பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, சமய சொற்பொழிவு, மாணவர்களின் பல்சுவை கலைப்போட்டிகள், சிறப்பு பூஜை, சுடலை ஆண்டவர் இந்து டிரைவர்கள் சார்பில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி ஆகியன நடந்தது. இரண்டாம் நாள் பூஜை, சமய சொற்பொழிவு, மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி, சிறப்பு பூஜை, சுடலை ஆண்டவர் கலா மன்றம் சார்பில் திரைப்பட நடிகைகள் நாகலெட்சுமி, மதுமிதா, ஷிவானி ஆகியோர் நடித்த "தென்றல் வரும் நேரம் நாடகம் நடந்தது.
மூன்றாம் நாள் பூஜை, மாணவ, மாணவியருக்கான கம்ப்யூட்டர் போட்டி, கர்நாடக சங்கீதம், 1008 திருவிளக்கு பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் திரைப்பட பின்னணி பாடகர்கள் வேல்முருகன், சாய்சரன், ஜோதிலெட்சுமி, ஐஸ்வர்யா, திரைப்பட நடிகர்கள் தேவதர்ஷினி, இமான் அண்ணாச்சி ஆகியோர் பங்கேற்ற மியூஸிக் நைட் நிகழ்ச்சி நடந்தது.நான்காம் நாள் பூஜை, சிவலப்பேரியில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, சமய சொற்பொழிவு, மாக்காப்பு அலங்கார பூஜை, சுடர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் பின்னணி பாடகிகள் ரியானா, அனுசுயா, சின்னத்திரை நடிகர்கள் இளவஞ்சி, தேவிபிரியா பங்கேற்ற இன்னிசை எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சி நடந்தது.ஐந்தாம் நாள் பூஜை, மாணவ, மாணவிகளின் ஓவியப்போட்டி, சிறப்பு பூஜை, பெண்களுக்கான சமையல் போட்டி, சமய சொற்பொழிவு, சுடலை ஆண்டவர் இந்து புதுஎழுச்சி மன்றம் சார்பில் நட்சத்திர கலை இரவு, அற்புத விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி, பால் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, வில்லிசை, மேளம், மகுடம், கரகம் ஆகியன நடந்தது.ஆறாம் நாளான நேற்று அன்ன பூஜை, காலை முதல் இரவு வரை அன்னதானம், மன்னராஜா கோயிலில் இருந்து மேளதாளத்துடன் யானை, குதிரை முன் செல்ல சிறுமியர் மற்றும் பெண்கள் மஞ்சள் பெட்டி எடுத்து பவனி வருதல், உச்சிக்கால பூஜை, சுவாமி மஞ்சள் நீராடல், சமய சொற்பொழிவுகள் நடந்தது.
கல்வி, கோலம், விளையாட்டு, கம்ப்யூட்டர், ஓவியம், கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேம்பர் செல்வராஜ், குமார், சுதந்தர், திவ்யா சில்க்ஸ், சுயம்புராஜன், ஜெயராமன், நெல்லை முருகேசன், கண்ணன், பிரபாகர், கேசவன் ஆகியோர் பரிசளித்தனர்.நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், இன்னிசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை, சுவாமிக்கு விசேஷ அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி திசையன்விளை பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை திசையன்விளை வடக்குத்தெரு, ஆனந்த விநாயகர், மன்னராஜா, சுடலை ஆண்டவர் கோயில்களின் நிர்வாகி குங்குமம் பாஸ்கர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் டிஎஸ்பி ஸ்டான்லிஜோன்ஸ் தலைமையில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயராஜ், ஜெயக்குமார், முத்து, ஞானசிகாமணி, சத்தியபாமா செய்திருந்தனர்.தீ தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை திசையன்விளை நிலைய தீயணைப்பு அலுவலர் வேலப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு செய்திருந்தனர். சுகாதார ஏற்பாடுகளை திசையன்விளை டவுன் பஞ்., நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.