பதிவு செய்த நாள்
24
அக்
2022
08:10
வெள்ளியை உருக்கி ஊற்றியது போல், காட்சியளிக்கிறது இமயமலை. அவ்வப்போது பாயும் சூரிய ஒளிக்கதிர்கள், பனியை உருக்கி, சிற்றோடைகளாக மாற்றி கீழே அனுப்புகிறது.
சட்டென்று மாறிய வானிலையால், மழைத்துளிளோடு, பனிக்கட்டிகளும் போட்டி போட்டு கொண்டு, ஆதியும் அந்தமுமாக இமயமலை சாரலில் அருள்பாலிக்கும், கேதார நாதரின் பாதார விந்தம் தேடி சரணாகதி அடைந்து கொண்டிருக்கும் ஒரு அழகிய காலை.ரத்த நாளங்கள் வரை ஊடுருவும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், அந்த பிரமாண்ட கோவிலின் முன் காத்திருக்கின்றனர் பக்தர்கள். அடுத்த சில நிமிடங்களில், நடை திறக்கப்படுவதற்கு அச்சாரமாக கோவில் ஊழியர் ஒருவர், மணியை ஒலிக்க விடுகிறார். மணியின் நாதம் கேட்ட, ஆயிரக்கணக்கான பக்தர்களின் விழிகள், வெள்ளித்தகடுகளால் வேயப்பட்ட கதவை நோக்கி ஒரு சேர குவிகின்றன. அடுத்த நொடியே, கதவு திறக்கிறது.
மிகப்பெரிய தீபத்துடன் வெளியே வந்த தலைமை பண்டிட்,கிழக்கு நோக்கியும், இமயமலை நோக்கியும் தீபஆரத்தி காட்டுகிறார். ஜோதி சொரூபனை தரிசித்த கணத்தை எண்ணி, மெய்யுருகிய பக்தர்கள் கூட்டம், ஜெய்ஸ்ரீ கேதார் நாத் என கோஷமிட்டவாறு கோவிலுக்குள் செல்கிறது. பிறவிப்பயனை அடைந்தோம் என்ற திருப்தியில், பக்தர்கள் பரவசம் அடைகின்றனர். பிளந்த பூமி மலர்ந்த பெருமான் மகாபாரத போரில், கவுரவர்களை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். சிவபெருமான் கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள், காசியிலிருந்து கயிலாயம் நோக்கி யாத்திரை புறப்பட்டனர்.ஹரித்வார் வழியாகஇமயமலையைஅடைந்த போது சிவபெருமானை கண்டனர். ஆனால், உடனே மறைந்து விட்டார். (அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) சிவபெருமானை தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலய பள்ளத்தாக்கில் இருக்கும்கவுரிகுந்த் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கும் சிவபெருமானை தேடி அலைந்த போது, நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையை கண்டனர்.உடனே, பீமன் தனது கதாயுதத்தை கொண்டு அதனை தாக்க முயன்றான். ஆனால், தப்பிவிட்டது. இருப்பினும், கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்து கொண்டது.
பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்ற போது, நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது.
காட்டெருமையின் உடற்பகுதி கேதார் நாத்தில் இருந்தது. அந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்கு காட்சியளித்து, பாவத்தை போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோவிலின் கருவறையில் உள்ளது.
தடுத்த பெரும்பாறை ஆட்கொண்ட கேதார நாதர்: கடந்த, 2013 ஜூன் மாதம் கேதார் நாத் அமைந்துள்ள பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 16ம் தேதி இரவு, 7:30 மணி அளவில் கேதார்நாத் கோவில் அருகில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது.மந்தாகினி ஆற்றில் நீரோட்டம் பெருக்கெடுத்து கட்டுக்கடங்காது சோர்பாரி தால் என்னும் இடத்தின் வழியாக பாய்ந்தது. மறுநாள் காலை 6:40 மணியளவில் சரஸ்வதி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாறைகளையும் அடித்து கொண்டு ஓடியது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெரிய பாறை ஒன்று கேதார்நாத் கோவிலின் பின் நின்றது. அந்த பாறை வெள்ள நீரை கோவிலுக்கு இருபுறமாக பிரித்து விட்டது. இதனால், பெரும் சேதம் உண்டாவது தவிர்க்கப்பட்டது. இதுவும் கேதார நாதரின் மகிமை என்றே சிவனடியார்கள் உரைக்கின்றனர். கேதார்நாத்திலுள்ள கடைகள், விடுதிகள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. ராணுவத்தால் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வரை பலர் கோவில் வளாகத்தில் தஞ்சமடைந்தனர். அதன்பின், கோவில் சீரமைக்கப்பட்டு, 2014 மே மாதம் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
பாண்டவர் வழிபட்ட பூமி: கோவிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சொர்கத்திற்கு சென்ற இடமான சொர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது.கோவிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், வீரபத்திரர், திரவுபதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையினுள் ஜோதிர்லிங்கமாக கேதாரநாதர் காட்சி அளிக்கிறார்.ஆதி சங்கரர் இந்த
கோவிலோடு சேர்த்து உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பல கோவில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோவிலுக்கு பின் அமைந்துள்ளது.
எப்படி செல்வது? உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது கேதார் நாத் கோவில், நம் நாட்டிலுள்ள, 12 ஜோதிர்லிங்களில் இதுவும் ஒன்று. மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக கோவில் ஏப்., மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளி திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோவிலில் உள்ள உற்சவமூர்த்திகள், குப்தகாசியின் ஒக்கிமத் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோவிலுக்கு நேரடியாக சாலை வழியாக செல்ல முடியாது. டேராடூனிலிருந்து தரை மார்க்கமாக, 285 கி.மீ., சீத்தாப்பூர் சென்று, அங்கிருந்து 16 கி.மீ. துாரத்திலுள்ள கவுரிகுந்த் செல்ல வேண்டும். தொடர்ந்து, 14 கி.மீ. மலைப்பகுதிகளில் நடந்தோ அல்லது குதிரையிலோ கோவிலுக்கு செல்லலாம்.தற்போது, சீத்தாப்பூரில் இருந்து ஹெலிகாப்டரிலும் செல்லலாம். இதற்காக, முன் கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மொத்தம், ஆறு நிறுவனங்கள் ெஹலிகாப்டர் சேவையை மேற்கொள்கின்றன. டேராடூனில் இருந்தும், ஹெலிகாப்டரில் கேதார் நாத் செல்ல முடியும்.கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார் ஆகியோர் தேவாரம் பாடி வணங்கி உள்ளனர். பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோவிலை கட்டியதாகவும் ஐதீகம் உண்டு. ஆதி சங்கரரின் வருகைக்குப் பின், கோவில் புனரமைக்கப்
பட்டது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள பஞ்ச கேதார ஸ்தலங்களில், கேதார் நாத் கோவிலும் ஒன்று.
யாத்திரையில் பங்கேற்கலாம்!
திருப்பூரை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது:கடந்த 2013ல் வெள்ளம் வந்து கோவில் சேதமடைந்தது. அதன்பின், பிரதமர் மோடி, கேதார் நாத் கோவில் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து வருவதை பார்த்தோம்.கேதார்நாத் யாத்திரை செல்ல அனைத்து வசதிகளும் உள்ளதால் தான்,வயதானவர்கள் பலரும் வருகின்றனர். பணிகள் முடிவுறும் போது, இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழகத்திலுள்ள பக்தர்கள், கேதார்நாத் சென்று, கேதார நாதரை வழிபடலாம். இவ்வாறு, அவர் கூறினார். கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஏப்., மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளி திருநாள் வரையே கோவில்திறந்திருக்கும். குளிர் காலங்களில்உற்சவமூர்த்திகள், குப்தகாசியின்ஒக்கிமத் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. சீத்தாப்பூரில் இருந்து ஹெலிகாப்டரிலும் கேதார்நாத் செல்லலாம். இதற்காக,முன் கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மொத்தம், ஆறு நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவையை மேற்கொள்கின்றன. டேராடூனில் இருந்தும், ெஹலிகாப்டரில் கேதார் நாத் செல்ல முடியும். ஆதி சங்கரர் இந்த கோவிலோடு சேர்த்து உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பல கோவில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோவிலுக்கு பின் அமைந்துள்ளது. கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம், ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. துாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ., (11,755 அடி) உயரத்தில் கோவில் அமைந்துள்ளது. எட்டாம் நுாற்றாண்டில் ஆதி சங்கரர், இந்த இடத்துக்கு வந்த போது கோவில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.